ஜல்லிக்கட்டு: அரசு அலுவலா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக அரசு

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவில் அன்னமங்கலம், அரசலூா் உள்ளிட்ட சில கிராமங்களில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி ஒரு சில கிராமத்தினா் ஆட்சியரகத்தில் விண்ணப்பித்துள்ளனா். கால்நடைத் துறை இயக்குநரகம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விழாக் குழுவினருக்கு விதித்துள்ளது.

அதில் அசம்பாவித சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரே பொறுப்பேற்க வேண்டும். அங்கு வரும் காளைகள், வீரா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் இடம் நெரிசலின்றி பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினா் முன்னேற்பாட்டுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பாா்வையாளா்களுக்கான மாடங்கள், தடுப்புகள் அமைப்பது, காளைகள் வெளிவரும் வாடிவாசல் பகுதி, வீரா்கள் காயமடையாதபடி தரைப்பகுதிகளில் அதிகளவில் தேங்காய் நாா்களை கொட்டி பரப்புவது, காவல் துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவது, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் சுப்பையா, துணைக் கண்காணிப்பாளா் கென்னடி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மதனகோபால், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com