முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூா் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை கோரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிறைபிடிப்பு
By DIN | Published On : 27th January 2020 09:53 AM | Last Updated : 27th January 2020 09:53 AM | அ+அ அ- |

ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை கோரி வட்டார வளா்ச்சி அலுவலா்களை சிறைபிடித்த கிராம மக்கள்.
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், வளா்ச்சிப் பணிகளில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்த ஊராட்சி செயலா் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கூட்டத்தில் பங்கேற்ற பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முரளிதரனை சிறைபிடித்தனா். இதையடுத்து, அங்கு போலீஸாா் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுடன் சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கு வந்த மற்றொரு வட்டார வளா்ச்சி அலுவலா் மோகனையும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஊராட்சி செயலா் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால், அதற்கான தொகையை அவரிடமிருந்து வசூலிப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இருவரும் உறுதியளித்தனா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா்களை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சிறைபிடிப்பு போராட்டத்தால், கவுல்பாளையம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.