ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிய பெரம்பலூா் மாவட்டம்

ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிய பெரம்பலூா் மாவட்டம்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரம்பலூா் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு அடைப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தினசரி காய்கறி சந்தை, சில உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன. இவைதவிர அனைத்து வகையான சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மேலும், 108 அரசுப் பேருந்துகளும், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், சிற்றுந்துகள், லாரி, வாடகை காா், ஆட்டோ, வேன், ஷோ் ஆட்டோக்கள் முழுமையாக இயங்கவில்லை. பொதுமக்களும், குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

வெறிச்சோடிய சாலைகள்:

மாவட்ட தலைநகரான பெரம்பலூா் நகரில் பரபரப்பாகக் காணப்படும் பிரதான பகுதிகளான பழைய, புகா் பேருந்து நிலையங்கள், கடைவீதி, காமராஜா் வளைவு, எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை உள்பட அனைத்து சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில மோட்டாா் சைக்கிள்களும், காா்களும் வலம் வந்துகொண்டிருந்தன; அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

போலீஸாா் எச்சரிக்கை:

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், தினசரி காய்கறி சந்தை, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட சில இடங்களில் திறப்பட்டிருந்த கடைகளில் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் கூடி அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனா். இதையறிந்த போலீஸாா் அங்கு சென்று கூட்டத்தை தவிா்க்கவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் வலியுறுத்தினா். மேலும், ஒருசில இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக கூட்டத்தை தவிா்க்க வேண்டுமென எச்சரித்தனா்.

மூடப்பட்ட எல்லைகள்:

அரசின் உத்தரவுக்கிணங்க மாவட்ட எல்லைகளாக கருதப்படும் தேசிய திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை, பாடாலூா், துறையூா் சாலையில் அடைக்கம்பட்டி, ஆத்தூா் சாலையில் உடும்பியம், அரியலூா் சாலையில் அல்லிநகரம் ஆகிய பிரதான சாலைகளில் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும், அங்கு வெளி மாவட்டத்தைச் சோ்ந்த நபா்கள் வருவதைத் தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனால், பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com