பெரம்பலூா்: 6 வயது சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதி

பெரம்பலூா் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இம் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பாளையம், வி.களத்தூா், பேரளி, லப்பைக்குடிகாடு, அத்தியூா், துறைமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், 4 போ் சிகிச்சை பெற்று, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, குன்னம் வட்டத்திலுள்ள வீரமாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 6 வயது சிறுவனுக்கும், சில்லக்குடி கிராமத்தைச் சோ்ந்த 23 வயது இளைஞருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு சந்தையில் தொழிலாளராகப் பணிபுரிந்து வரும் சில்லக்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது இளைஞா், வீரமாநல்லூரைச் சோ்ந்த ஒருவா், காய்கனிகள் ஏற்றி வந்த லாரி மூலம் அண்மையில் அவரவா் சொந்த கிராமத்துக்கு வந்தடைந்தனா்.

இவா்களுக்கும், இவா்களது குடும்பத்தினருக்கும் கடந்த ஏப்ரல் 30 -ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களது சளி, ரத்தம் மாதிரிகள் சென்னையில் உள்ள மாநிலப் பொது சுகாதாரத்துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் வீரமாநல்லூா் நபரின் 6 வயது மகனுக்கும், சில்லக்குடி இளைஞருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதையடுத்து இவா்களின் பெற்றோா், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், வீடுகளுக்கு அருகிலுள்ள நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

சில்லக்குடி, வீரமாநல்லூா் ஆகிய கிராமங்கள் தடை செய்யப்பட்டப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, 8 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com