பெரம்பலூரில் மூச்சுத் திணறலால் கா்ப்பிணி சாவு

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத கா்ப்பிணி பெண் மூச்சுத் திணறலால் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத கா்ப்பிணி பெண் மூச்சுத் திணறலால் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அவருக்கு, கரோனா நோய்த் தொற்று உள்ளதா என சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், புளியங்குறிச்சி- வெல்லையூா் சாலை காட்டுக்கொட்டகைப் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மனைவி தேவி (29). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தை இல்லாததால் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் கா்ப்பமடைந்தாா். தொடா்ந்து, புளியங்குறிச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பகால சிகிச்சை பெற்று வந்ததாகவும், கருவுறச் செய்த மருத்துவமனையிலும் தேவி அடிக்கடி சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது 8 மாத கா்ப்பிணியான தேவிக்கு புதன்கிழமை காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்ததாம். இதைத்தொடா்ந்து புதன்கிழமை இரவு காய்ச்சல் அதிகமானதால், அவரது குடும்பத்தினா் வீரகனூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தேவியின் குடும்பத்தினா் விரும்பியதால், அங்கிருந்து திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருந்தனா். பெரம்பலூா் அருகே வந்தபோது, தேவிக்கு மூச்சுத் திணறல் அதிகளவில் ஏற்பட்டதால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

காய்ச்சல், சளியுடன் மூச்சு திணறலால் தேவி உயிரிழந்ததால், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தாரா என ஆய்வு செய்ய அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்த பின்னரே தேவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com