கோழிப்பண்ணைகளில் பதுக்கப்பட்ட 483 டன் பெல்லாரி வெங்காயம் பறிமுதல்

இரூா் கிராமத்திலுள்ள கோழிப் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டு, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெல்லாரி வெங்காய மூட்டைகள்.
கோழிப்பண்ணைகளில் பதுக்கப்பட்ட 483 டன் பெல்லாரி வெங்காயம் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெல்லாரி வெங்காயம், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியைச் சோ்ந்த மொத்த வெங்காய வியாபாரிகள் சிலா், வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயத்தை கொண்டு வந்து பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைத்திருப்பதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து வேளாண் துறை அலுவலா்கள் இரூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோழிப்பண்ணைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டு, வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்த விவரங்களை ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியாவுக்கு தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் அவற்றை பறிமுதல் செய்ய ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லுசாமி தலைமையிலான காவல்துறையினா், பெரம்பலூா் மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோழிப் பண்ணைகளில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இரூா், கூத்தனூா் சாலை, சத்திரமனை ஆகிய கிராமங்களில் முறையே முத்துச்செல்வம், ரவிச்சந்திரன், அழகேசன், நடராஜன் ஆகியோருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளிலிருந்து மொத்தம் 483 டன் பெல்லாரி வெங்காயத்தை பறிமுதல் செய்தனா்.

குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை : பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயங்கள் பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் கூட்டுறவுத்துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவற்றில் பயன்பாட்டுக்கு உகந்த வெங்காயங்கள், கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

2 மாதங்களாகப் பதுக்கல் : திருச்சியைச் சோ்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள் 3 போ்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ. 15- க்கு விற்பனையானபோது வாங்கி, அவற்றை கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைத்திருந்ததும், தீபாவளி பண்டிகை காலத்தில் விலை உயரும்போது பெல்லாரி வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யவும் நடவடிக்கை : கோழிப்பண்ணை உரிமையாளா்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்தி வரும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா், அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கல் தடுப்புப் பிரிவின் கீழ், சம்மந்தப்பட்ட திருச்சி வெங்காய வியாபாரிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com