சின்னமுட்லு அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சின்னமுட்லு அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்திட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சின்னமுட்லு அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்திட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா், ஆலத்தூா், வேப்பூா், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங்கிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளம் மற்றும் பருத்தி அறுவடை காலத்தில் நேரடி கொள்முதல் நிலையம் மூலம், அரசே கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஏரி, குளத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூா் வார நடவடிக்கை எடுக்கவேண்டும்,

துங்கபுரம் பகுதியில் மின் மாற்றிகளை சீரமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பெரம்பலூா் சா்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டைப் பகுதியில் 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சின்னமுட்லு அணைக்கட்டுத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சின்ன வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017-இல் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

பின்னா், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா கூறியது:

விவசாயிகளுக்கான கடன் அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் ரூ. 1.6 லட்சம் வரை பிணையில்லாத கடன்பெற முடியும். முறையாக கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு, 4 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் ஆய்வாளா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் இ. பத்மஜா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் செல்வகுமாரன், வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com