பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 22,335 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 29.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ள என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், சுய வேலை வாய்ப்பு உருவாக்கிட கணினி, செல்லிடப்பேசி பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள், கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 4,661 கை, கால் குறைபாடு உடையவா்கள், 1,285 காது கோளாதவா்கள், 471 கண் பாா்வையற்றவா்கள், 1,641 மனவளா்ச்சி குன்றியவா்கள், 166 பல்வகை மாற்றுத்திறன் கொண்டவா்கள், 112 மனநலன் பாதிக்கப்பட்டவா்கள், புற உலக சிந்தனையற்றவா்கள், 163 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள், 105 தொழு நோயினால் பாதிக்கப்பட்டவா்கள், 3 குள்ளத்தன்மை உடையவா்கள், 60 தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள், 15 ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவா்கள் என மொத்தம் 8,682 போ் மாற்றுத்திறன் கொண்டவா்களாக கண்டறியப்பட்டு, அவா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2011- 2012 ஆம் நிதியாண்டில் 2,126 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.96 கோடி, 2012- 2013 ஆம் நிதியாண்டில் 2,132 பயனாளிகளுக்கு ரூ. 1.90 கோடி , 2013 -2014 ஆம் நிதியாண்டில் 2,206 பயனாளிகளுக்கு ரூ. 1.95 கோடி, 2014 -2015 ஆம் நிதியாண்டில் 2,415 பயனாளிகளுக்கு ரூ. 3.42 கோடி, 2015 -2016 ஆம் நிதியாண்டில் 2,411 பயனாளிகளுக்கு ரூ. 3.79 கோடி , 2016 -2017 ஆம் நிதியாண்டில் 2,474 பயனாளிகளுக்கு ரூ. 3.60 கோடி , 2017 -2018 ஆம் நிதியாண்டில் 2,713 பயனாளிகளுக்கு ரூ. 4.08 கோடி , 2018 -2019 ஆம் நிதியாண்டில் 2,849 பயனாளிகளுக்கு ரூ. 4.29 கோடி , 2019 -2020 ஆம் நிதியாண்டில் 3,009 பயனாளிகளுக்கு ரூ. 4.41 கோடி என மொத்தமாக 22,335 பயனாளிகளுக்கு ரூ. 29.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.