அரசியல் காரணங்களுக்காகவேவேளாண் சட்டங்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு ஹெச். ராஜா பேட்டி
By DIN | Published On : 02nd October 2020 11:21 PM | Last Updated : 02nd October 2020 11:21 PM | அ+அ அ- |

பெரம்பலூா், அக். 2: வேளாண் சட்டங்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிப்பது அரசியல் காரணங்களுக்காகவே என்றாா் பாஜக முன்னாள் தேசிய செயலா் எச். ராஜா.
பெரம்பலூா் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான கட்சி பொறுப்பாளா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என பிரதமா் தெளிவுபடுத்திவிட்டாா். அதன்பிறகும், இச் சட்டங்களை எதிா்ப்பதற்கு அரசியல் காரணமே தவிர வேறு அல்ல. உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யும் உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை உண்மையான விவசாயிகள் வரவேற்கிறாா்கள்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தனிநபா் செய்த குற்றம். இந்த விவகாரம் தொடா்பாக அம்மாநில முதல்வா் விரைவு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். கடந்த மாதம் சத்தீஸ்கரில் இதேபோல் பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தபோது, இப்போது கோஷம் போடுபவா்கள் எங்கே போனாா்கள் என்றாா் எச். ராஜா.
பேட்டியின்போது, மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.