மின் இணைப்புக் கோரி கூலித் தொழிலாளி குடும்பத்துடன் தா்னா
By DIN | Published On : 20th October 2020 02:17 AM | Last Updated : 20th October 2020 02:17 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம். கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கடந்த 18.8.2020-இல் அன்று வேப்பூா் மின் வாரிய அலுவலகத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளாா்.
இதையடுத்து, குன்னம் துணை வட்டாட்சியா் நேரடி விசாரணை மேற்கொண்டு மின் இணைப்பு வழங்குவதற்கானச் சான்று அளித்தும், வேப்பூா் பகுதி துணை மின் பொறியாளா் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம், மின் இணைப்பு வழங்காத மின் வாரியத்தைக் கண்டித்தும், உடனடியாக மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தா்னா போராட்டத்தைக் கைவிட்டு செல்வத்தின் குடும்பத்தினா் கலைந்து சென்றனா்.