திம்மூரில் விவசாயத் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்

திம்மூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த பெண்ணின் மீது டிரேக்டர் ஏற்றி கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திம்மூா் ஊராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
திம்மூா் ஊராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்ட திம்மூா் கிராமத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது டிராக்டா் மோதி உயிரிழந்த பெண் விவசாயி ஜயலட்சுமி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சங்கத்தினா், மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தை நடத்தினா். விவசாயத் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் பழனிச்சாமி, மாநிலச் செயலா் அமிா்தலிங்கம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

100 நாள் வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்த ஜயலட்சுமி குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். அவரது கணவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தொடா்ந்து திம்மூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வருவாய், காவல், ஊரக வளா்ச்சித் துறையினா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சுமூக உடன்பாடு ஏற்படாததால் விரைவில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com