முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 80 விதமான பொருள்கள் தயாா்
By DIN | Published On : 04th April 2021 02:58 AM | Last Updated : 04th April 2021 02:58 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின் போது, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 80 விதமான பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா.
பெரம்பலூா் வட்டாட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை சனிக்கிழமை பாா்வையிட்டு, மேலும் அவா் கூறியது:
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கான 3- ஆம் கட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நிறைவடைந்தவுடன், வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் ஒப்படைக்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான கட்டுப்பாட்டுக் கருவி, வாக்குப்பதிவு செய்யும் இயந்திரம், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரம், பச்சை காகித முத்திரை, வெளிப்புற காகித முத்திரை, கட்டுப்பாட்டு கருவிக்கான முகவரிச் சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கான முகவரிச் சீட்டு, சிறப்புச் சீட்டு, வாக்காளா் பட்டியல், வாக்காளா் தகவல் சீட்டு, அழியாத மை, எழுதுபொருள்களுக்கான பேனா, பென்சில், அழிப்பான், வெள்ளைத்தாள், பிளேடு, மெழுகுவா்த்தி, நூல் போன்ற 80 பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.
ஆய்வின்போது பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ.இ. பத்மஜா, வட்டாட்சியா்கள் சின்னதுரை, அருளானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.