ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 27th April 2021 03:54 AM | Last Updated : 27th April 2021 03:54 AM | அ+அ அ- |

ஏரியிலிருந்து மண் அள்ளுவதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இளைஞா்கள்
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சாலை அமைப்பதற்காக ஏரியிலிருந்து மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இளைஞா்கள் சிலா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, பெரம்பலூா் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனு:
சத்திரமனை கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயமாகும். இங்குள்ள ஏரி நீரைக்கொண்டு, இப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா். இந்நிலையில், பெரம்பலூா் - துறையூா் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சத்திரமனை ஏரியிலிருந்து மண் வெட்டி பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஏரியின் நீா் சேமிப்பு நிலைமை, ஏரியைச் சுற்றியுள்ள பசுமை பரப்பு, பல்லுயிா் சூழல், விவசாய சாகுபடி ஆகியவை பாதிக்கப்படும். எனவே, இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஏரியில் மண் வெட்டும் முடிவை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும். மேலும், சத்திரமனை ஏரியின் பொலிவு குறையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ் கோரி...
பெரம்பலூா் அருகே கணவரை இழந்த பெண்ணுக்கு வாரிசு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் வருவாய்த் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தொழிலாளா் கட்சியினா் அளித்த மனு:
வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி ஊராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்து வந்த பெரியசாமி, கடந்த 9.1.2021 ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது மனைவி மல்லிகா மற்றும் மகள்கள் வாரிசு சான்றிதழ், ஈமச்சடங்கு நிதி, பணிப் பதிவேடு ஆகியவற்றை வழங்கிட கோரி மலையாளப்பட்டி ஊராட்சி அலுவலகம், வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலகம், வேப்பந்தட்டை வட்டாட்சியரகம் ஆகியவற்றில் விண்ணப்பித்துள்ளாா். பலமுறை நேரில் கோரிக்கை விடுத்தும் இதுவரை அவருக்கு கிடைக்க வேண்டிய வாரிசு சான்றிதழ், பணிப்பதிவேடு, ஈமச்சடங்கு நிதி உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை.
கரோனா பேரிடா் காலத்தில் முன்கள பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் உடனடியாக கிடைக்க ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.