குன்னம் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல் துறையினரைக் கண்டித்து, காவல் நிலையம் எதிரில் பெண் ஒருவா் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல் துறையினரைக் கண்டித்து, காவல் நிலையம் எதிரில் பெண் ஒருவா் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். இதில் மீட்கச் சென்ற பெண் தலைமைக் காவலரும் காயமடைந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகள் அகிலா (27).

இவா், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இந்நிலையில் அகிலாவுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த அமரதீபம் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட்டனா்.

இதுகுறித்து அகிலாவின் தாய் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கடந்த மே மாதம் திருப்பூரில் தங்கியிருந்த அமரதீபம், அகிலா ஆகியோரை அழைத்து வந்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் அவரவா் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில் அமரதீபத்திடமிருந்து தனது 7 பவுன் சங்கிலியை மீட்டுத் தர வேண்டுமென குன்னம் காவல் நிலையத்தில் அகிலா சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அமரதீபத்துக்கு ஆதரவாக காவல் துறையினா் செயல்படுவதாகக் கூறி, காவல் நிலையத்தின் முன்பு அகிலா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதையறிந்த பெண் தலைமைக் காவலா் ரீத்தல், அகிலாவை காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயமடைந்த அகிலா, பெண் காவலா் ரீத்தல் பெரம்பலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com