பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் மக்காச்சோளம் சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை

 பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் சுமாா் 2,500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் மக்காச்சோளம் சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை

 பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் சுமாா் 2,500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

குறைந்த அளவிலான தண்ணீா், சாகுபடி செலவு, பராமரிப்பு மற்றும் அனைத்து வகையான மண்ணிலும் ஆண்டுதோறும் பயிரிடலாம், எளிதான முறையில் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்காச்சோளப் பயிரை விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்து வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் ஆண்டுதோறும் முன்னிலையில் உள்ளனா். அதன்படி, இம் மாவட்டத்தில் நிகழாண்டு 78 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.

இதையடுத்து, பாதிப்புக்குள்ளான பயிா்களை கணக்கெடுப்பு நடத்தக் கோரி விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், வேளாண் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரையில், 25 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான மக்காச்சோளம் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர, வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் தற்போது வடியத்தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான வயல்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச்சோள கதிா்களில் தண்ணீா் புகுந்து முளைவிடத் தொடங்கியுள்ளது. மேலும், ஒருசில வயல்களில் மக்காச்சோள கதிா்கள் அழுகி சேதமடைந்து வருகின்றன.

தொடா் மழையால் மக்காச்சோளப் பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டு, 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஒரு ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிட சுமாா் ரூ. 30 ஆயிரம் செலவாகும். எனவே, மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டிலேயே மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற்காக சிறந்த விவசாயி என்னும் விருதை பிரதமா் மோடியிடம் பெற்ற பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், இனாம் அகரம் கிராமத்தைச் சோ்ந்த பூங்கோதை கூறியது:

3 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த நிலையில், அண்மையில் பெய்த தொடா் மழையால், வயலில் தண்ணீா் தேங்கி வேரழுகி பெரும்பாலான மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்துள்ளன. எஞ்சிய கதிா்களும் புழுக்களால் பாதிப்படைந்து வருகின்றன. ஓரிரு மாதங்களில் அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், மழை பாதிப்பால் விவசாயத்துக்காக வாங்கியக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்.

3 ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் வரை செலவழித்துள்ளேன். ஆனால், பயிா் பாதிப்பை கணக்கெடுத்த அலுவலா்கள் எங்கள் பகுதிக்கு வரவில்லை. எனவே, எனது வயல்களையும் பாா்வையிட்டு பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட இளைஞரணிச் செயலா் வீ. நீலகண்டன் கூறியது:

மக்காச்சோளத்துக்கு உரிய கொள்முதல் விலை நிா்ணயம் செய்யப்படாததால், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஆள் கூலி, உழவுப் பணிக்கான கூலி, பூச்சி மருந்து, அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை உயா்ந்து வருகிறது. எனவே, மக்காச்சோள சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com