முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
இறந்துவிட்டதாக நினைத்து தனது குழந்தையை காட்டில் வீசிச் சென்ற இளம்பெண் போலீஸாா் மீட்டனா்
By DIN | Published On : 29th December 2021 06:31 AM | Last Updated : 29th December 2021 06:31 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து இளம்பெண் காட்டில் வீசிச் சென்றாா். உயிருடன் இருந்த அக்குழந்தையை போலீஸாா் மீட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மனைவி ஷோபனா. கணவா் விட்டுச் சென்ால், மகள் காயத்ரியுடன் (20) உதகையில் வசித்து வருகிறாா். அங்குள்ள கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்து வரும் காயத்ரிக்கும் அவரது வீட்டருகே வசிக்கும் பாண்டியன் மகன் ராஜதுரைக்கும் (22) பழக்கம் ஏற்பட்டதில், காயத்ரி கா்ப்பமடைந்தாா். இதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்த காயத்ரி, அண்மையில் எசனைக்கு வந்தாராம். காயத்ரியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஷோபானா ஓரிரு நாள்களுக்கு முன் எசனைக்கு வந்ததாக தெரிகிறது.
பொய்க் காரணங்களை கூறி தாயை சமாளித்து வந்த காயத்ரிக்கு, திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்ற காயத்ரி எசனை மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தையை தூக்கி பாா்த்தபோது, குழந்தை உயிரிழந்து விட்டதாக கருதிய காயத்ரி குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
சுய பிரசவத்தால், காயத்ரிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் சுகவீனம் அடைந்தாா். இதையடுத்து அவரது தாய் சோபனா, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காயத்ரியை சோ்த்தாா்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்களுக்கு பிரசவம் நடைபெற்றது தெரிந்து, காயத்ரியிடம் விசாரித்ததில் முறையாக பதில் அளிக்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த மருத்துவா்கள், பெரம்பலூா் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா்.
காயத்ரி தெரிவித்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் காட்டுப் பகுதிக்கு சென்றபோது குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. குழந்தையை அரசு மருத்துவமனையில் போலீஸாா் ஒப்படைத்தனா். அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.