பெரம்பலூா் அருகே பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன்களுக்காக விண்ணப்பித்து, அதற்கான உத்தரவும், உரமும் பெறப்பட்ட நிலையில், கடன் வழங்க நிதி இல்லை எனக்கூறி கடன் தொகையை பட்டுவாடா செய்யாமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனராம். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி பொருந்தாது, பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் என கூட்டுறவு வங்கி அலுவலா்கள் தெரிவிக்கின்றனராம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரம்பலூா் மாவட்டம், இரூா் கிராமத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தள்ளுபடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவாக கடன் தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, வங்கி அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.