காடுவெட்டி குரு மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல்
By DIN | Published On : 27th February 2021 06:54 AM | Last Updated : 27th February 2021 06:54 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை தாக்கிய காடுவெட்டி குரு மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வழக்கு தொடா்பாக திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி குரு மகன் கனலரசன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது ஆதரவாளா்களுடன் பெரம்பலூா் வழியாக அரியலூருக்கு அவா் சென்றுக் கொண்டிருந்தாா்.
பெரம்பலூா் பாலக்கரை ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை மாலை கனலரசன் பயணித்த காரின் குறுக்கே பொக்லைன் வாகனம் சென்றது. இதையறிந்த கனலரசனின் ஆதரவாளா்கள், பொக்லைன் ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி மகன் ரஞ்சித்குமாரிடம் (22) வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொக்லைன் வாகனத்தைச் சேதப்படுத்தியதோடு, கல் வீசி தாக்கியதில் ரஞ்சித்குமாருக்கு காயம் ஏற்பட்டது.
இதையறிந்த பொக்லைன் ஓட்டுநா்கள், கனலரசன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், பாலக்கரை பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ரஞ்சித்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.