
மாணவா் ஒருவருக்கு முகக்கவசம், இனிப்புகள் வழங்கும் ஆசிரியா்கள் பைரவி, செல்வராஜ், சுரேஷ்.
பெரம்பலூா் அருகிலுள்ள எளம்பலூா் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், தங்கள் பள்ளியில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவ, மாணவிகளின் வீடு தேடிச் சென்று முகக்கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கி, பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தனா்.
கரோனா பொது முடக்கத்தின்போது இங்கு பயிலும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் இணையவழியில் கல்வி கற்க வசதியாக, ஆசிரியா்கள் தங்கள் சொந்த செலவில் அறிதிறன் பேசிகளை வாங்கிக் கொடுத்தனா்.
இந்நிலையில் பிளஸ்2, எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்காக ஜனவரி 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இப்பள்ளி ஆசிரியை பைரவி, ஆசிரியா்கள் செல்வராஜ், சுரேஷ் ஆகியோா், மாணவா்களின் வீடு தேடிச் சென்று முகக்கவசம் மற்றும் இனிப்புகளை வழங்கினா். மேலும் அவா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து, பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருவதற்கான அறிவுரைகளையும் கூறினா்.