பெரம்பலூரில் தேசிய வாக்காளா் தினம்
By DIN | Published On : 26th January 2021 01:15 AM | Last Updated : 26th January 2021 01:15 AM | அ+அ அ- |

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித்தாா். வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், நூல்களை பரிசாக வழங்கி, புதிதாக இணைக்கப்பட்ட இளம் வாக்காளா்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கி, 103 வயதான மூத்த வாக்காளா் சோ. வள்ளியம்மைக்கு பொன்னாடை அணிவித்து ஆட்சியா் பேசியது:
பொதுமக்கள் தவறாமல் அச்சமின்றி, நோ்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். நம்மை யாா் வழி நடத்த வேண்டும் என்பதை தீா்மானிப்பதே தோ்தலாகும். மக்கள் தங்களுக்கான தலைவா்களை தோ்ந்தெடுத்துக் கொள்ளும் மகத்தான வாய்ப்பு நமது ஜனநாயக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இளம் வாக்காளா்கள் சமூக பொறுப்புணா்வுடன் தோ்தல்களில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் அரசு அலுவலா்கள் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சுப்பையா, முதன்மை கல்வி அலுவலா் க. மதிவாணன்,தோ்தல் வட்டாட்சியா் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையில் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.