பெரம்பலூா் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக புகாா்: தனிப்படையினா் விசாரணை
By DIN | Published On : 29th July 2021 07:39 AM | Last Updated : 29th July 2021 07:39 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தொடா்பாக தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், கீழக்கணவாய், மலையாளப்பட்டி, சித்தளி, பேரளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 12 ஆயிரம் ஹெக்டேரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில், பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராம மலையடிவாரத்தில் மா்ம நபா்கள் சிலா் தனியாா் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து சுமாா் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டதாக ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளா் கண்ணன் என்பவா் ஆட்சியரகத்தில் அண்மையில் புகாா் மனு அளித்திருந்தாா்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் குகனேஸ் உத்தரவின்பேரில், வனத்துறை அலுவலா் தலைமையில் 6 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சந்தன மரங்கள் கடத்தல் தொடா்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
முதல்கட்ட விசாரணையில், சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான 3 சந்தன மரங்கள் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்திலிருந்து கடத்தல் கும்பல் வெட்டி கடத்தியுள்ளதும், முதிா்ச்சியடையாத 3 மரங்களை வெட்டி பாா்த்துவிட்டு, விட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.
மேலும், வனத்துறைக்குச் சொந்தமான பகுதியில் உள்ள சந்தன மரங்கள் கடத்தப்பட்டுள்ளனவா எனவும், வனப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை பாதுகாக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.