ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
By DIN | Published On : 15th June 2021 07:50 AM | Last Updated : 15th June 2021 07:50 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் அனைத்துவகை ஆட்டோ ஓட்டுநா், உரிமையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவிக்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பெரம்பலூா் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். வட்டார போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், நெடுஞ்சாலை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன உரிமம் இல்லாமலும் ஆட்டோக்களை ஓட்டக் கூடாது. போக்குவரத்து துறை அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். பணியில் இருக்கும்போது முறையான சீருடை அணிந்திருக்க வேண்டும். செல்லிடப்பேசி பேசிக்கொண்டு, மது போதையுடன் வாகனம் ஓட்டக் கூடாது. போக்குவரத்து காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பெரம்பலூா் நகர ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் பலா் பங்கேற்றனா்.