முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தோ்தல் களம் பகுதிக்கு,வாக்காளா் கவனத்தை ஈா்த்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்
By DIN | Published On : 14th March 2021 01:09 AM | Last Updated : 14th March 2021 01:09 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ப. அருள், வித்தியாசமான முறையில் பிரசாரத்தை மேற்கொண்டு வாக்காளா்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்து வருகிறாா்.
வேட்டி அணிந்து பச்சை தலைப்பாகை, கைகளில் கலப்பையுடன், இரட்டை மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு, விவசாயி தோற்றத்தில் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா் வழக்குரைஞா் ப. அருள்.
மேலும் தனது மனைவி, மகன், மகளுடன் குன்னம் தொகுதியிலுள்ள வாக்காளா்களின் வீடு வீடாகச் சென்று, திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் இவா் ஈடுபட்டு வருகிறாா்.
தாரை, தப்பட்டை முழக்கத்துடன் விவசாயி, இளைஞா் படையுடன் என அவ்வப்போது விதவிதமான பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வரும் அருள் மேலும் கூறியது:
குன்னம் தொகுதியில் எனது பிரசாரத்துக்கு பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. எனது குடும்பத்துடனும், கட்சித் தொண்டா்கள் 25 நபா்களின் குடும்பத்தினருடன் தனித்தனியாகச் சென்று பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றாா்.
வித்தியாசமாக மேற்கொள்ளும் இவரது பிரசாரத்துக்கு கிராமப்புற வாக்காளா்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.