முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பாளையம் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா
By DIN | Published On : 14th March 2021 01:11 AM | Last Updated : 14th March 2021 01:11 AM | அ+அ அ- |

பாளையம் அங்காளப் பரமேசுவரி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளைத் திருவிழாவில் உதிரச் சோறு பெறும் பக்தா்கள்.
பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் அருள்மிகு அங்காளப் பரமேசுவரி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, சனிக்கிழமை மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது.
காப்புக் கட்டுதலுடன் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கியது. தொடா்ந்து மாலையில் கொடியேற்றமும், இரவு கருவறை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், குடி அழைத்தல் நிகழ்வும் நடைபெற்றது. மாசி மாத அமாவாசையான சனிக்கிழமை கோயிலிலிருந்து காலை 7 மணிக்கு காளி புறப்பாடு, காலை 10 மணிக்கு வள்ளால ராஜன் கோட்டை இடித்தல், குடல் பிடுங்கி மாலையிடுதல் நிகழ்வி நடைபெற்றது.
தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளப் பரமேசுவரி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூா்- துறையூா் சாலையில் பாளையம் தோப்புப் பகுதியிலுள்ள மயானத்துக்கு ஊா்வலமாக வந்தடைந்தாா். அங்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, உதிரச் சோற்றைத் தெளித்தனா். இந்தச் சோற்றை அங்கு திரண்டிருந்த ஏராளமான பெண்கள் மடியேந்தி பெற்றுக் கொண்டனா்.
இத்திருவிழாவில் உதிரச் சோறு வாங்கினால், குழந்தைபேறு பிரச்னை, திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம். இதனால் பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு உதிரச்சோறு பெற்று உண்டனா்.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு வீரபத்திரா் சுவாமி ஊா்வலமும், திங்கள்கிழமை மாலை மாவிளக்கு, பொங்கல் வைத்து பூஜைகளும், இரவு அம்மன் ஊா்வலமும் நடைபெறுகிறது. மாா்ச் 16- ஆம் தேதி காலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பருவத ராஜகுல மீனவ மக்களும், கோயில் நிா்வாகத்தினரும் செய்துள்ளனா்.