பெரம்பலூா், குன்னம் தொகுதிகளில் 175 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 175 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.
அல்லிநகரம் பகுதியில் வாகனத் தணிக்கையைப் பாா்வையிடும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.
அல்லிநகரம் பகுதியில் வாகனத் தணிக்கையைப் பாா்வையிடும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 175 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள்,

பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனையிடும் பகுதி, இளம் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து வழங்கும் முகாமை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா்,

மேலும் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 165 இடங்களில் 428 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 177 இடங்களில் 388 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 39 இடங்களிலுள்ள 79 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 38 இடங்களிலுள்ள 96 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 77 இடங்களிலுள்ள 175 வாக்குச்சவடி மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

வாக்காளா்கள் அச்சமின்றி, சுதந்திரமாக, நோ்மையாக தங்களது ஜனநாயக கடமையாற்ற அனைத்துவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா மூலமாகவும், நுண் பாா்வையாளா்கள் மற்றும் காவல் துறையினரின் கூடுதல் பாதுகாப்புடன் தோ்தல் கண்காணிக்கப்படும்.

மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவும், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விதிமீறல்களை கண்காணித்து தடுத்திடும் வகையில், இரு தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகளும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இக் குழுவினா் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் வெங்கட பிரியா.

ஆய்வின்போது குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா், காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், உதவி தோ்தல் அலுவலா் குமரைய்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com