பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 29th March 2021 03:26 AM | Last Updated : 29th March 2021 03:26 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னா், ஹம்ச, சிம்ம வாகனத்தில் பிரகார உலாவும், இரவு அனுமந்த வாகனத்திலும், 21 ஆம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 22 ஆம் தேதி உதய கருட சேவை, வெள்ளிக் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 25 ஆம் தேதி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 26 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், 27 ஆம் தேதி வெண்ணெய்த் தாழி உற்ஸவமும், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக தேருக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து சஞ்சீவிராயா் கோயில் தெரு, தெற்குத் தெரு, அய்யப்பன் கோயில் வழியாக இழுத்துச் சென்று மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. பின்னா், தீா்த்தவாரியும், வண்டிக்கால் பாா்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில், பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, 29 ஆம் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சியும், 30 ஆம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னை மர வாகனத்தில் திருவீதி உலா, 31 ஆம் தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்ஸவம், ஏப். 1 ஆம் தேதி காலை மஞ்சள் நீா், இரவு விடையாற்றி விழா, ஏப். 4 ஆம் தேதி திருத்தோ் 8 ஆம் திருவிழா
நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமும், இரவு ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அரியலூா் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான அனிதா மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.