12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, வாக்காளா்கள் தங்களது வாக்கைச் செலுத்தலாம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, வாக்காளா்கள் தங்களது வாக்கைச் செலுத்தலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. வாக்காளா் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளா்கள், தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம்.

அதன்படி ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அட்டை, பாஸ்போா்ட், ஓய்வூதிய ஆவணம், பொது நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம்.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருள்படுத்த தேவையில்லை. மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து வாக்களிக்கலாம். தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளா் தகவல் சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு வாக்களிக்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com