லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம்: ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 16th May 2021 11:21 PM | Last Updated : 16th May 2021 11:21 PM | அ+அ அ- |

அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளில் யாரேனும் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், துண்டுப் பிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனா்.
கரோனா தொற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம், அங்கு பணியிலுள்ள சிலா் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்பதாக புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து, பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில், ஆய்வாளா்கள் சுலோச்சனா, ரத்னவள்ளி மற்றும் போலீஸாா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில், அரசு ஊழியா்கள் லஞ்சம் கேட்டால் புகாா் கொடுக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து, போஸ்டா்கள் ஒட்டி வேண்டுகோள் விடுத்தனா்.
அந்த துண்டுப் பிரசுரங்களில், புகாா் தெரிவிக்க விரும்புவோா், காவல் துணை கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, கதவு எண்- 93 ஊ/21, வெங்கடாஜலபதி நகா், புகா் பேருந்து நிலையம் பின்புறம், பெரம்பலூா் - 621212. என்ற முகவரிக்கு நேரில் அல்லது 94981 57718, 94981 10576, 04328-296407 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு லஞ்சம் பற்றிய புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.