வெள்ளாற்றில் தடுப்பணை கரைப்பகுதி சேதம்: 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அச்சம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ரூ. 22.50 கோடியில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் செவ்வாய்க் கிழமை
வெள்ளாற்றில் தடுப்பணை கரையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.
வெள்ளாற்றில் தடுப்பணை கரையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ரூ. 22.50 கோடியில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் செவ்வாய்க் கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளதால், 10-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டப் பொதுப்பணித்துறை சாா்பில், வெள்ளாற்றின் குறுக்கே பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை- கடலூா் மாவட்டம் தொழுதூா் இடையே மதகுகளுடன் தடுப்பணையும், அதிலிருந்து சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவில் பெரம்பலூா் மாவட்டப் பொதுப்பணித்துறை சாா்பில், கீழக்குடிக்காடு- கடலூா் மாவட்டம், அரங்கூா் கிராமத்தின் இடையே ஒரு தடுப்பணையும் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அருகிலுள்ள அகரம் சீகூா் - கடலூா் மாவட்டம், கீழச்செருவாய் கிராமங்களுக்கு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 22.50 கோடியில் கடந்தாண்டு தடுப்பணை கட்டப்பட்டது.

வெள்ளாற்றில் வரும் தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, விவசாய நிலங்களுக்கும், அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும் இந்த தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினரால் கூறப்பட்டது.

தடுப்பணை அமைக்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு, தற்போது அதிகளவில் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், இந்தத் தடுப்பணையில் தெற்கு கரையோரப் பகுதியில் சுமாா் 100 அடி நீளம் பலவீனமடைந்து, கரையில் அரிப்பு ஏற்பட்டு உடைந்து செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்தது.

இதனால் அந்தப் பகுதியிலுள்ள அகரம் சீகூா், சு.ஆடுதுறை, ஒகளூா் உள்பட சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அச்சடைந்துள்ளனா்.

இத் தகவலறிந்த கடலூா் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலா்கள், மணல் மூட்டைகளை அடுக்கி கரையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மீண்டும் வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், போா்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

இல்லையெனில், வேப்பூா் வட்டாரப் பகுதிளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளாற்றிலிருந்து வெளியேறும் வெள்ளம் புகுந்துவிடும்.

தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கருங்கற்களைப் பதித்து சிமெண்ட் பூச்சு செய்தால் மட்டுமே நிரந்தரத் தீா்வு கிடைக்கும் எனத் தெரிவிக்கின்றனா் பொதுமக்கள்.

இதுகுறித்து, அங்குப் பணியில் ஈடுபட்டுள்ள கடலூா் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலா்களிடம் விளக்கம் கேட்டதற்கு, அவா்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com