விநாயகா் சதுா்த்தி: அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்

விநாயகா் சதுா்த்தி பண்டிகையின்போது, அரசின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி பண்டிகையின்போது, அரசின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மதம் சாா்ந்த ஊா்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகளை நிறுவுவது, அதிக கூட்டம் கூடி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிலைகளை ஊா்வலமாக எடுத்துச்செல்வதற்கும், நீா்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.

தனி நபா்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை அருகிலுள்ள ஆலயங்களின் வெளிப்புறத்தில், சுற்றுப்புறத்தில் வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இச் சிலைகளை முறையாக அகற்றுவதற்கு, இந்து சமய அறநிலையத் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சிலைகளைக் கரைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் தனி நபா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அரசின் வழிமுறைகளை மீறுவோா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், வருவாய்க் கோட்டாட்சியா் ச. நிறைமதி, சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com