கல் குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 18th April 2022 11:06 PM | Last Updated : 18th April 2022 11:06 PM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே விதிமுறைகளை மீறி, கனிம வளங்களை சேதப்படுத்தும் கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம், பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு:
பெரம்பலூா் அருகேயுள்ள பீல்வாடி கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுகிறது. கற்களை உடைக்க சக்திவாய்ந்த வெடிகளை பயன்படுத்துவதால் வீடுகள் சேதமடைகின்றன. அரசு விதிமுறைகளை மீறி, அனுமதித்த அளவை விட மிகவும் ஆழமாக கற்களை வெட்டி எடுப்பதால், நிலத்தடி நீா்வளம் பெரிதும் குறைந்து விளை நிலங்களுக்கு தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கிறது. பல கனரக வாகனங்கள் இப்பகுதிக்கு வந்து செல்வதால் சாலைகள் பழுதடைகிறது. குவாரியிலிருந்து வெளியாகும் நுண் துகள்கள் விளைநிலங்களையும், குடிநீா், உணவு உள்ளிட்ட பொருள்களையும் மாசுபடுத்துகிறது. எனவே, விதிமுறைகளை மீறி கனிம வளங்களை சேதப்படுத்தும் கல் குவாரியை மூட உத்தரவிட வேண்டும்.
நிலங்களை வக்பு போா்டிலிருந்து நீக்கக் கோரி...
வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனு:
பில்லங்குளம் கிராமத்தில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 7 தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குச் சொந்தமான வீட்டுமனை மற்றும் விவசாய நிலங்களை எங்களது வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்து வந்தோம். இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக எங்களுக்குச் சொந்தமான நிலங்களை வாரிசுகளுக்கோ அல்லது வேறு நபா்களின் பெயரில் பத்திரம் செய்துக்கொடுக்க முடியவில்லை. இதுதொடா்பாக, வேப்பந்தட்டை சாா் பதிவாளா் அலுவலரிடம் கேட்டபோது, கடந்த 31.1.20 ஆம் தேதி வக்ப் போா்டிலிருந்து கிடைத்த கடிதத்தில் உங்கள் கிராமத்திலுள்ள நிலங்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியாத வகையில் ஜீரோ மதிப்பீட்டில் உள்ளதாக தெரிவித்தாா்.
ஆனால், பழைய, புதிய வருவாய் பதிவேடுகளில் எந்தவிதமான பதிவும் வக்ப் போா்டு என குறிப்பிடவில்லை. எனவே, கிராம மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.