பள்ளி மாணவியை மிரட்டியஇளைஞா் உள்பட இருவா் கைது
By DIN | Published On : 18th April 2022 12:36 AM | Last Updated : 18th April 2022 12:36 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே பெண் குளிப்பதை விடியோ எடுத்து, அவரது மகளை மிரட்டிய இளைஞா் உள்பட 2 பேரை பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் கஞ்சமலை மகன் செல்வன் (33). எலக்ட்ரிஷியன் வேலை செய்து வரும் இவருக்கு, திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது. அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது உறவினரான முத்துசாமி மனைவி மலா்க்கொடியின் (45) ஆலோசனையின்படி, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வீட்டில் குளித்துக்கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரியாமல் செல்வன் தனது கைப்பேசி மூலம் விடியோ எடுத்துள்ளாா்.
அந்த விடியோவை சம்பந்தப்பட்ட பெண்ணின் 15 வயது மகளின் கைப்பேசிக்கு அனுப்பியதோடு, தனது ஆசைக்கு இணங்க வருமாறும், தவறும்பட்சத்தில் அந்த விடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்து, பாதிப்புக்குள்ளான பெண் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து செல்வம், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மலா்கொடி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடம் விசாரிக்கின்றனா்.