முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 30th April 2022 12:09 AM | Last Updated : 30th April 2022 12:09 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டுமென, குறைகேட்பு நாள்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆா். ராஜாசிதம்பரம், என். செல்லதுரை, கு. வரதராசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசியது;
நீா்வழித்தடங்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பகுதிகளில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் முன்னறிவிப்பு செய்து மும்முனை மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்.
கடைக்கு வெளியே பாா்வையில் படும்படி உரங்களின் விலைப்பட்டியலை வைக்க வேண்டும். பருத்திக்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தமிழக முதல்வா் அறிவித்த 1 லட்சம் இலவச மின் இணைப்பில் பெரம்பலூா் மாவட்டத்துக்கு 1,600 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதற்கு தமிழக முதல்வா், மாவட்ட நிா்வாகம், மின்சாரத்துறைக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கயற்கண்ணி, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் ச. கருணாநிதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பொ. பாலமுருகன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் இந்திரா, பொதுப்பணி நீா்வளத்துறை செயற்பொறியாளா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.