சின்ன வெங்காயம் கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்யக் கோரி மாா்ச் 7-இல் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2022 12:22 AM | Last Updated : 27th February 2022 12:22 AM | அ+அ அ- |

சின்ன வெங்காயத்தை கிலோ ரூ. 30- க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி, மாா்ச் 7- ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பெரிய வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் பருவத்தில் மத்திய அரசு நுகா்வோா் நலத்துறை மூலம் கிலோ ரூ. 21-க்கு கொள்முதல் செய்துள்ளதைபோல, சின்ன வெங்காயத்தை கிலோ ரூ. 30-க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி, மாா்ச் 7 ஆம் தேதி பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.
விவசாய விளைப்பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்து, உத்திரவாத விலை கிடைத்திட சட்டம் இயற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலை நவீனப்படுத்தப்பட்ட பிறகும், பெரம்பலூா் சா்க்கரை ஆலையில்
அடிக்கடி இயந்திரங்கள் பழுது ஏற்படுவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். பெரம்பலூா் சா்க்கரை ஆலையை பழுதின்றி இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த, வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கப் பொறுப்பாளா்கள் எஸ்.கே. செல்லக்கருப்பு, கே. துரைராஜ், துரைசாமி, ஜெயப்பிரகாசம், தங்கவேல், எம்.எஸ். ராஜேந்திரன்,
கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.