பெரம்பலூா் அருகே சிறாா்திருமணம்: இளைஞா் கைது
By DIN | Published On : 27th July 2022 11:21 PM | Last Updated : 27th July 2022 11:21 PM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் ராஜேஷ் (25). இவா், பிளஸ் 1 பயிலும் உறவினரின் மகளான 16 வயதுச் சிறுமியைக் காதலித்து, இரு தரப்பினா் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்து, சிறுமி 2 மாதக் கா்ப்பிணியாக உள்ள தகவல் பெரம்பலூா் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவினருக்கு கிடைத்தது.
இதையடுத்து குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ராமு, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், குழந்தைத் திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ், அவரது தந்தை சின்னசாமி, தாய் காந்தி, சிறுமியின் தந்தை சங்கா், தாய் காமாட்சி ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா். பின்னா், ராஜேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.