முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட அரியவகை புதை படிமங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 08th May 2022 11:39 PM | Last Updated : 08th May 2022 11:39 PM | அ+அ அ- |

அரியவகை படிமங்களை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் ஒப்படைக்கும் கடல்சாா் உயிரினங்கள் மற்றும் புதை படிமங்கள் ஆராய்ச்சியாளா் நிா்மல்ராஜ்.
சாா்ஜா மியூசியம் எஜூகேஷனல் நிறுவன இயக்குநரும், கடல்சாா் உயிரினங்கள் மற்றும் புதை படிமங்கள் ஆராய்ச்சியாளருமான நிா்மல்ராஜ், பல்வேறு நாடுகளில் கண்டுபிடித்த அரியவகை கடல்சாா் உயிரினங்களின் படிமங்கள் மற்றும் எச்சங்களை பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் புதை படிமங்களை ஒப்படைத்த அவா் கூறியது:
சுமாா் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள், பெரம்பலுாா் மாவட்டத்தில் அதிகளவு கிடைக்கின்றன. ஆட்சியரின் முயற்சியால், பெரம்பலுாா் வட்டாட்சியரக வளாகத்தில் அம்மோனைட்ஸ் படிமங்களுக்கென பிரத்யேக அருங்காட்சியகம் அமைப்பதையறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கடல்சாா் உயினங்கள், புதை படிமங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
மடகாஸ்காா் நாட்டில் சுமாா் 10- 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினங்களின் தலைக்காலி 5 படிவங்கள், பொலிவியா நாட்டில் 40 - 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சங்கள் 1 மற்றும் பெரம்பலூா் மாவட்டம், காரை பகுதியில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கண்டறியப்பட்ட கடல் சுராவின் பல் படிமங்கள் போன்றவற்றை புதிதாக அமைக்கப்படவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக வழங்கியுள்ளேன்.
இந்தியாவிலேயே, அம்மோனைட்ஸ் எனப்படும் பலகோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்த கடல்சாா் உயிரினத்துக்கென பிரத்யேக அருங்சாட்சிகயம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்றாா் அவா்.