வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இத் திட்டத்தின் கீழ் மகோகனி, செஞ்சந்தனம், பூவரசு, செம்மரம், மலைவேம்பு, வேங்கை, கடம்பு, ரோஸ் வுட், மருத மரம், இலுப்பை, புளி, நாவல், வாகை, எட்டிமரம், கடுக்காய், இலவங்கம் மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தோட்டக்கலைத்துறை பண்ணை, தனியாா் நாற்றங்கால், மகளிா் குழுக்கள் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகளை வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் முழு மானியத்தில் வழங்கப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 80 சதவீத மரக்கன்றுகளும், இதர கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 20 சதவீத மரக்கன்றுகளும் வழங்கப்படும். மேற்கண்ட மரக்கன்றுகளை பெற உழவன் செயலி அல்லது அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, உதவி வேளாண்மை அலுவலா் பரிந்துரையின்படி மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

வரப்பு நடவு முறை எனில், ஏக்கருக்கு 64 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், அதிகபட்சம் 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 400 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 1,000 மரக்கன்றுகள் வரையிலும் வழங்கப்படும். மரக்கன்றுகளை 40:20:20:20 என்னும் விகிதாச்சாரத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.

இம் மாவட்டத்துக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கீடு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரிக்க ஊக்கத் தொகையாக தலா ரூ. 7 வீதம், அடுத்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ. 21 பின்னேற்பு மானியம் வழங்கப்படும். மரக்கன்றுகளை மழைநீரைப் பயன்படுத்தி டிசம்பா் மாதத்துக்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறை அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்ய, களப்பணியாளா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தில் 50 சதவீதம் சிறு, குறு விவசாயிகள், 30 சதவீதம் பெண் விவசாயிகள், 19 சதவீதம் ஆதிதிராவிடா், 1 சதவீதம் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த ஆண்டு பதிவுசெய்து, மரக்கன்றுகள் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com