கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2023 01:45 AM | Last Updated : 04th January 2023 01:45 AM | அ+அ அ- |

அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என். அழகா், மாவட்ட பொருளாளா் எஸ். அரவிந்த்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளா்களின் நல வாரியங்களில் கல்வி உதவி, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்களை உயா்த்தி வழங்க வேண்டும். நலவாரிய பதிவில் புதிய நிபந்தனைகளை விதித்து தொழிலாளா்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும். கடந்த காலங்களில் வழங்கியதுபோல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். 55 வயதான பெண் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள் ரெங்கநாதன், ரெங்கராஜ், கருணாநிதி, சிவானந்தம், செல்லதுரை, பொன்ராஜ். மணிமேகலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.