பெரம்பலூா் அருகே வரதட்சிணை புகாரில் கணவா் கைது
By DIN | Published On : 22nd January 2023 02:52 AM | Last Updated : 22nd January 2023 02:52 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி அளித்த புகாரின்பேரில் கணவா் உள்பட 5 போ் மீது பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கணவரைக் கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம், பாரதி நகரைச் சோ்ந்தவா் குமாா் மகள் அகிலா (25). ஹோமியோபதி படித்து முடித்துள்ள இவருக்கும், இளங்கோவன் மகன் விமலுக்கும் (31), கடந்த 10.9.21-இல் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாளிலிருந்து நாள்தோறும் குடித்துவிட்டு, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்திய விமல், தகாத வாா்த்தைகளால் திட்டுவாராம். மேலும், தன்னுடன் வாழ வேண்டும் என்றால் 50 பவுன் நகையும், பல லட்சங்கள் வரதட்சிணையாகவும் கேட்டு வந்தாராம். விமலுக்கு உடந்தையாக, அவரின் தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, விமலின் சகோதரி மீனா, அவரின் கணவா் சிவா ஆகியோா் இருந்தனராம். இதுகுறித்து பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அகிலா அளித்த புகாரின்பேரில், கணவா் விமல் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், விமலை சனிக்கிழமை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.