மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 245 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 26th January 2023 12:00 AM | Last Updated : 26th January 2023 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், உடும்பியம் ஊராட்சிக்குள்பட்ட கள்ளப்பட்டியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு தலைமை வகித்து, 245 பயனாளிகளுக்கு ரூ. 2,23,37,145 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் இதுவரை 4 தொடக்கக் கல்வி பயிலும் 181 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமூக நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டம் என்பது அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். இத் திட்டத்தின் ,மூலம் பெண்களுக்கு உயா் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேல் படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தோ்வுகளின்படி மேல்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயா் கல்வியால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி, அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தலாகும். நிகழாண்டு, கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் அனைத்து மாணவிகளையும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.