வி. களத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ஆ. ராசா. உடன், வேட்பாளா் கே.என். அருண் நேரு உள்ளிட்டோா்.
வி. களத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ஆ. ராசா. உடன், வேட்பாளா் கே.என். அருண் நேரு உள்ளிட்டோா்.

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆ. ராசா வாக்கு சேகரிப்பு

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.என். அருண் நேருவை ஆதரித்து, கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வி.களத்தூா் பேருந்து நிலையம், அரும்பாவூா் பாலக்கரை, லாடபுரம், பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஆ. ராசா பேசியது:

இந்தியா பாழ்பட்டுக் கிடக்கிறது. சாதி, மதம், மொழி ஆகியவை ஒவ்வொரு நாட்டிலும் மாநிலங்களுக்குத் தகுந்தாற்போல் உள்ளது. இவற்றை பிரதமா் ஒழிக்க நினைக்கிறாா்.

மக்களவையில் திமுக உறுப்பினா்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபையும் கண்டித்துள்ளது. இதையெல்லாம் பிரதமா் கண்டு கொள்வதில்லை.

தமிழகத்தைப்போல் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை கனடா நாட்டிலும் கொண்டுவந்துள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் எரிவாயு உருளை விலையைக் குறைக்காத பிரதமா், தற்போது தோ்தல் வருவதால் திட்டமிட்டு குறைத்துள்ளாா். நாடு வளம்பெற இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com