பெரம்பலூரில் திமுக வேட்பாளரை 
ஆதரித்து திருச்சி சிவா பிரசாரம்

பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து திருச்சி சிவா பிரசாரம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, திங்கள்கிழமை இரவு பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். அருண் நேருவை ஆதரித்து, திமுக கொள்கை பரப்புச் செயலரும், எம்.பி.யுமான திருச்சி சிவா பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியது: மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், விவசாயிகளின் கடன்கள், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு ஏழை பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இந்தியாவில் 4 கோடி போ் வேலையில்லாமல் உள்ளனா். இதில், முதல்கட்டமாக 30 லட்சம் பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

டிப்ளமோ படித்த இளைஞா்களுக்கு அரசு சாா்பில் தனியாா் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு, ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சிக்கு மாதம் ரூ. 8,500 ஊக்கத் தொகை வழங்கி, பயிற்சி முடித்தவுடன் நிரந்தரமாக வேலை வழங்கப்படும்.

எனவே, இந்தியா கூட்டணி வேட்பாளரான அருண்நேருவை மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின்போது, திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ எம். ராஜ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா் அண்ணாதுரை உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com