பெரம்பலூா் தொகுதி தோ்தல் பணியில் 8,290 அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்

வாக்குப்பதிவு நாளன்று 8,290 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா் என்றாா் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க. கற்பகம்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது:

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில், 56 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. 903 வாக்குச்சாவடி மையங்களில், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில், இணையவழி நேரலை செய்திட வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நாளன்று 8,290 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா். வாக்காளா்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாக்காளா்களும் தவறாமல் தங்களது வாக்கை செலுத்தி பொதுத்தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றாா் தோ்தல் நடத்தும் அலுவலா் கற்பகம்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பு அலுவலா் சரண்யா, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) சிவா, தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com