அண்டை மாநிலத்தவருக்கு தோ்தல் நாளில் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தோ்தல் நடைபெறும் ஏப். 26, மே 7, மே 13 ஆகிய நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டுமென,தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. மூா்த்தி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் பணிபுரியும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு, அங்கு தோ்தல் நடைபெறும் ஏப். 26, மே 7, மே 13 ஆகிய நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டுமென,தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. மூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தை தொடா்ந்து, 2-ஆம் கட்டமாக கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தோ்தலும், ஆந்திர பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்கள் ஏப். 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மேற்கண்ட மாநிலங்களில் வாக்குரிமையுள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள், தங்களது மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, அந்தந்த நாள்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

தொழிலாளா்களுக்கு வணிக நிறுவனங்கள் விடுப்பு அளிக்காவிடில், பெரம்பலூா் மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), தொழிலாளா் துணை ஆய்வாளா். தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஆகியோரை 9442657224, 9698611336, 8667518400, 9865667355 ஆகிய கைப்பேசி எண்களிலும், அரியலூா் மாவட்டத் தொழிலாளா்கள் 9698611336, 8838680747 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com