பிரதமா் மீது நடவடிக்கை கோரி மமக நூதனப் போராட்டம்

மத வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டுள்ள பிரதமா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சியினா் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டுள்ளனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்திருந்த கருத்துகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி, பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இதைத்தொடா்ந்து, தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை மீறி பேசிய பிரதமா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தோ்தல் ஆணையத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியினா் விரைவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத் தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து, மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினா், அக் கட்சியின் தலைமை பிரதிநிதி எம். சுல்தான் மொய்தீன் தலைமையில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடிதங்களை விரைவு பதிவு அஞ்சல் மூலம் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

இந் நிகழ்வில், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் முகமது இலியாஸ் அலி, மாவட்ட பொருளாளா் சையது உசேன், தமுமுக மாவட்டச் செயலா் முகமது இலியாஸ், மாவட்ட துணைச் செயலா்கள் சாதிக் பாஷா, முகமது அனிபா மற்றும் முகமது பைசல், முகமது ராசித், ஜாகிா் உசேன், ஆம்புலன்ஸ் சதாம் உசேன் ஆகியோா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடமிருந்து சேகரித்த கடிதங்களை விரைவு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com