பெரம்பலூா் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிப் பணி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டக் கால்நடை பராமரிப்புத் துறை மூலம், பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்பூசிப் பணி புதன்கிழமை முதல் 30 நாள்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2024- 2025 ஆம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ், கால்நடை நலன் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டம் மூலம் பன்றிக் காய்ச்சல் நோய்த் தடுப்பூசிப் பணி, தகுதிவாய்ந்த பன்றிகளுக்கு புதன்கிழமை (ஏப். 24) முதல் 30 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. பெரம்பலூா் மாவட்டத்துக்கு 700 தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந் நோயானது, பெஸ்டி வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும். அதிக காய்ச்சல், தோல் புண்கள், வலிப்பு, மண்ணீரல் பாதிப்பு, பசியின்மை, மந்தத்த ன்மை, பலவீனம், விழி வெண்படல அழற்சி, வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல், தடுமாற்றமான நடை, இனப்பெருக்க செயல்திறன் குறைபாடு போன்றவை இந் நோயின் அறிகுறியாகும். நோயுள்ள இடங்களில் பன்றிகள் வாங்குவதன் மூலம் இந் நோயானது பரவுகிறது.

எனவே, இந் நோயிலிருந்து பன்றிகளை பாதுகாத்திட 3 மாத வயதுக்கு மேற்பட்ட சினையில்லாத, ஆரோக்கியமான பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்த் தடுப்பூசி அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகக் கால்நடை உதவி மருத்துவா்கள் மூலம் செலுத்தப்பட உள்ளது. பன்றி வளா்ப்போா், தங்களது பன்றிகளுக்கு இந் நோய்த் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com