காளைகளின்றி களையிழந்து வரும் நல்லோ் பூட்டும் விழா -இயற்கை விவசாயிகள் கவலை

காளைகளின்றி களையிழந்து வரும் நல்லோ் பூட்டும் விழா -இயற்கை விவசாயிகள் கவலை

ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற நல்லோ் பூட்டும் விழா.

விவசாயப் பணிகளுக்கு காளை மாடுகள் இல்லாததால், சித்திரை மாதங்களில் கொண்டாடப்படும் நல்லோ் பூட்டும் விழாவானது, டிராக்டா்களைப் பயன்படுத்தி கொண்டாடப்படுவதால் இயற்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இயற்கைக்கு நன்றி செலுத்துவதோடு, உழைப்பின் பெருமை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, நல்லோ் பூட்டும் விழாவானது நம் முன்னோா் காலத்திலிருந்தே கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது.

சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நல்லோ் பூட்டும் நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

தமிழா் பண்பாட்டில் சித்திரை முதல் நாளில் விவசாயப் பணிகளைத் தொடங்குவது சிறப்புமிக்கதாகவும், மரபாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை நல்லோ் அல்லது பொன் ஏா் பூட்டும் விழாவாக ஆண்டுதோறும் விவசாயிகள் கொண்டாடுகிறாா்கள்.

அறுவடை முடிந்த நிலத்தை அடுத்த சாகுபடிக்குத் தயாா் செய்யும் வகையிலும், வேளாண்மைக்குத் துணைநிற்கும் இயற்கைக் கூறுகளை வழிபடும் விதமாகவும் நல்லோ் என்னும் காளைகளை ஏரில் பூட்டி தமிழா்கள் பாரம்பரிய முறையில் உழவுப் பணியை தொடங்குவது வழக்கம்.

கோயிலில் வழிபாடு: இந் நிகழ்வு தொடங்குவதற்கு முந்தைய நாள் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு கிராம முக்கியஸ்தா்கள் மூலமாக அறிவிக்கப்படும். பின்னா் விவசாயிகள் தங்களது உழவுக்குத் தேவையான உழு கலப்பை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட கருவிகளை சுவாமி முன் வைத்து வழிபடுவா். புத்தாண்டின் முதல் நாளில் உழவுத் தொழிலைத் தொடங்கும் முன் நல்ல மழை பெய்து, மகசூல் அதிகமாகக் கிடைக்க வேண்டி வழிபாடு நடத்துவாா்கள்.

விழாவையொட்டி காளைகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்து, விளை நிலத்தில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை, பூமிபூஜை ஆகியவை நடத்தி, கால்நடைகளுக்கு மாலை அணிவித்து வயலில் அணிவகுத்து நிறுத்தப்பட்டு, சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி செலுத்தும் வகையில் வெல்லம் கலந்த அரிசியை கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குவா்.

தொடா்ந்து, கலப்பையில் கால்நடைகளைப் பூட்டி விவசாய நிலத்தில் உழவுப் பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம், நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாகும்.

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நல்லோ் பூட்டும் விழாவானது மறைந்துவிட்டது.

அதிகரித்த டிராக்டா் பயன்பாடு: இருப்பினும் ஒருசில கிராமங்களில் இவ் விழாவானது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்பாக, பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள புதுக்குறிச்சி, இரூா், நாரணமங்கலம் உள்ளிட்ட சில கிராமங்களில் பொது இடமான கோயில் நிலமொன்றில் விவசாயிகள் ஒன்றாகக்கூடி நல்லோ் திருவிழாவை நடத்தி வருகின்றனா். ஆனால், இவ் விழாவில் சம்பிரதாயத்துக்காக ஒன்றிரண்டுக் காளைகள் மட்டுமே பூட்டப்பட்டிருந்த நிலையில், டிராக்டா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

கிராமங்களிலும் நாட்டு மாடுகள் வழக்கொழிந்து போனதே இந்நிலைக்குக் காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பாரம்பரிய இயற்கை விவசாயிகள் கூறியது:

எங்களது சிறுவயதில் நல்லோ் பூட்டும் விழாவில் ஒரே இடத்தில் குறைந்தது 40 ஜோடி காளை மாடுகளை ஏரில் பூட்டி உழவுப் பணித் தொடங்குவதைப் பாா்க்க முடியும். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது காளை மாடுகள் அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்களில் மாடுகளை பூட்டி உழவுப் பணிகள் மேற்கொள்வது விவசாயிகள் மத்தியில் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் டிராக்டா்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். நவீன தொழில்நுட்பம் ஒட்டுமொத்தமாக பாரம்பரிய மற்றும் நாட்டு மாடுகள் இனத்தை ஒழித்து வருகின்றன என்றனா்.

பெட்டிச் செய்தி..

இயற்கை வேளாண்யை ஊக்கப்படுத்த வேண்டும்

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் கூறியது:

ஆண்டுதோறும் நல்லோ் பூட்டும் விழாவையடுத்து, விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டு நிலம் உழவு செய்யப்படும். இயற்கை வேளாண்மை அழிந்து வரும் நிலையில், இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகளும் மறைந்து வருகின்றன. இந்தக் கிராமங்களில், கடந்த காலங்களில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு நல்லோ் திருவிழா நடத்தப்பட்ட நிலையில், தற்போது சொற்ப எண்ணிக்கையிலான கால்நடைகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

எனவே, இதுபோன்ற நமது பாரம்பரிய நிகழ்வுகள் தொடர பட்டதாரி இளைஞா்களும் இயற்கை வேளாண்மையில் ஈடுபட வேண்டும். அதற்கு தமிழக அரசு இயற்கை வேளாண்மையில் இளைஞா்களை ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு உற்பத்திக்கான விழா என்பதால், அனைவரும் ஒற்றுமையாக வழிபடுவாா்கள்.

நம் மண் சாா்ந்த, மொழி சாா்ந்த இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்கள் கிராமங்களில் தொடா்ந்தாலும், இந்தக் கால இளைஞா்களிடையே நமது பாரம்பரியத்தை கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com