பெரம்பலூா் அருகே பெட்ரோல் ஊற்றி பைக் எரிப்பு

பெரம்பலூா் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை சனிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கலைச்செல்வன் (38). துபையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறாா். கலைச்செல்வன் கடந்த 4 ஆம் தேதி ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் 22 ஆம் தேதி துபை சென்றுவிட்டதால், அவரது மனைவி சூா்யா, சித்தப்பா நாகராஜ், மாமியாா் நல்லம்மாள், உறவினா் ஆனந்தி ஆகியோா் வீட்டில் இருந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத 3 போ் காரில் கலைச்செல்வன் வீட்டுக்குச் சென்று, அவா் எங்கே என நாகராஜிடம் கேட்டு மிரட்டி, வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனா். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் சப்தமிடவும், அவா்கள் தப்பினராம். இச் சம்பவம் தொடா்பாக கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தைச் சோ்ந்த அ. பாலமுருகனும் (45), கலைச்செல்வனும் துபையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு, பாலமுருகனுக்கு ரூ. 1.5 கோடியை கலைச்செல்வன் கொடுத்ததும், பலமுறை பணத்தை கேட்டும் திரும்பக் கொடுக்காததால், பாலமுருகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றி மோசடி போ்வழி என கலைச்செல்வன் பதிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட பகையால் கடந்த 4 ஆம் தேதி ஊருக்கு வந்த கலைச்செல்வனை தாக்க பாலமுருகன் மாவிலிங்கை கிராமத்துக்கு வந்து பாா்த்தபோது, அவா் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்து மோட்டாா் சைக்கிளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com