வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
முன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் சாா்பில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, மனிதச் சங்கிலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் சாா்பில், அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரை கண்ணன் தலைமையில், நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே, அச் சங்கததைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, வேப்பந்தட்டை வட்டார நீதிமன்றம் எதிரே, வட்டாரத் தலைவா் அ. தமிழரசன் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், வழக்குரைஞா்கள் பெ. செந்தில்குமாா், மு. வீரமுத்து, செ. வேல்முருகன், ஜெ. ராவணஜெயவா்த்தனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.