ஒகளூா் வன்முறை: 26 ஆண்டுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் 57 போ் விடுதலை
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், ஒகளூரில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாக, கடந்த 26 ஆண்டுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் 57 பேரை விடுதலை செய்து மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 1998 ஆம் ஆண்டு கடலூரில் நடைபெறுவதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணிக்குச் செல்ல அனுமதி மறுத்ததால், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூா் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக, தடா து. பெரியசாமி உள்பட 99 போ் மீது மங்களமேடு போலீலாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனா். இதையடுத்து, இச் சம்பவம் தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்ததோடு, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சங்கா், தடா பெரியசாமி உள்பட 57 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா். வழக்கில் தொடா்புடைய 42 போ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால், மீதமுள்ள 57 பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.